கிழக்கின் நிலைமை கவலைக்கிடம்; ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்றாளர் பலர் தலைமறைவு.

கிழக்கின் நிலைமை கவலைக்கிடம்;
ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா
தொற்றாளர் பலர் தலைமறைவு
“கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன் சந்தை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதைத் தடுக்க முடியாது போகலாம்.”
– இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தி கலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் எச்சரித்துள்ளார்.
கொரோனாவின் சமகால நிலைமை தொடர்பில் இன்று அவர் கருத்துக் கூறும்போது மேலும் தெரிவித்ததாவது:-
“கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 09 பேரும், அம்பாறை நகரில் ஒருவருமாக ஒரே நாளில் 27 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
பேலியகொட மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்குக் கிடைத்த தகவலின்படி சந்தேகத்தில் பேரில் பலரைத் தேடிப்பிடித்து தனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனை செய்தபோது இந்த 27 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனைக்குடியில் 3 பேரும், நிந்தவூரில் ஒரு பெண்மணியும், பொத்துவிலில் 5 பேருமாக 9 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் வாழைச்சேனை கோறளைப்பற்றில் 11 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியவில் நடந்த திருமண வீடொன்றுக்குச் சென்று திரும்பி வந்தவர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நிந்தவூரில் இனங்காணப்பட்ட பெண்மணியின் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.
இன்னும் பலர் சமூகத்துக்குள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இந்த விடயத்தில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அலட்சியமாக இருந்தால் கிழக்கில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும். சுகாதாரத் துறை மட்டும் இந்த விடயத்தில் கவனம் எடுத்தால் போதும் என்று எண்ண வேண்டாம். எனவே, தயவுசெய்து சகலரும் ஒத்துழைக்ககுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்” – என்றார்.