விசா இல்லாக் குடிநுழைவை 30 நாள்களுக்குக் குறைக்க தாய்லாந்து திட்டம்.

விசா இல்லாமல் தாய்லாந்துக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் நாள்களைப் பாதியாகக் குறைக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வெறும் 30 நாள்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழைய சுற்றுப்பயணிகள் அனுமதிக்கப்படுவர். விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழையும் சில வெளிநாட்டினர் அந்நாட்டில் சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
அவற்றைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தாய்லாந்துச் சுற்றுப்பயண, விளையாட்டுத்துறை அமைச்சர் சொராவோங் தியேன்தோங் தெரிவித்தார்.
விசா ஏதும் இல்லாமல் தாய்லாந்தில் அதிகபட்சம் 60 நாள்கள் தங்க, 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 93 நாடுகளின் கடப்பிதழ்களைக் கொண்ட பயணிகளுக்கு அந்நாடு அனுமதி வழங்கி வருகிறது.
2025ஆம் ஆண்டில் 40 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை வரவேற்க தாய்லாந்து அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டில் தாய்லாந்துக்கு முன் இல்லாத அளவில் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கும் மார்ச் மாதம் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தாய்லாந்துக்கு 7.66 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஆண்டு அடிப்படையில் இது 4.4 விழுக்காடு அதிகம் என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.