இளையராஜா ஓர் இசை மேதை, அனைவருக்கும் முன்னோடி: மோடி புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை மறக்க இயலாது என இளையராஜாவும் தெரிவித்துள்ளார்.
லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய பின்னர் நாடு திரும்பிய இளையராஜாவை பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது, இளையராஜா எல்லா வகையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்வதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
இளையராஜாவின் சிம்பொனி முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்ததாகவும் அவரை இசை மேதை என்று குறிப்பிட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மோடி.
அதில், இந்திய இசை, கலாசாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இளையராஜா என்று குறிப்பிட்டுள்ளார்.
“இசை மேதை இளையராஜாவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. சில நாள்களுக்கு முன்பு லண்டனில் தமது முதலாவது மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியான ‘வேலியன்ட்’டை அளித்ததன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார் இளையராஜா.
“அவரது இணையற்ற இசைப் பயணத்தில் சிம்பொனி படைப்பு மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது,” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேபோல் இளையராஜாவின் எக்ஸ் பதிவில், தனது சிம்பொனி ‘வேலியன்ட்’ உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி பிரதமருடன் தாம் பேசியதாகவும் அவரது பாராட்டுக்கும் ஆதரவுக்கும் தாம் பணிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.