இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையே கிளப்பில் பயங்கர மோதல்.. ஆறு பேர் மருத்துவமனையில்.. நால்வர் கவலைக்கிடம்..

அவிசாவெல்ல நகரத்தில் உள்ள ஒரு கிளப்பில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த ஆறு பேர் அவிசாவெல்ல மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்த நான்கு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அவிசாவெல்ல தலைமை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட கிளப் வளாகத்தில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கிளப்பில் இருந்தவர்கள் மீது வெளியே இருந்து வந்த ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியதாகவும், “கோட்டஹெர பொட்டா” என்றழைக்கப்படும் பாதாள குழுவைச் சேர்ந்தவர் உட்பட ஒரு குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக அவிசாவெல்ல தலைமை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 23, 28, 29, 32, 33, 38 வயதுடையவர்கள் உள்ளனர். அவர்கள் குருவிட்ட, மானியங்கம, அவிசாவெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய அவிசாவெல்ல பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட சிறப்பு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.