மணிப்பூரில் ஜோமி மற்றும் ஹமா் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து பள்ளிகள், கடைகள் மூடல்

மணிப்பூரின் சுராசந்த்பூா் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமா் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து வியாழக்கிழமையும் அங்கு பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரு சமூகங்களிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். பலா் காயமடைந்தனா். வன்முறையைக் கண்டித்து, சுராசந்த்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் வியாழக்கிழமையும் பள்ளிகள், கடைகள் மூடப்பட்டிருந்தன.

பொதுமக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுராசந்த்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த குகி-ஜோமி மற்றும் ஹமா் சமூகங்களின் 12 அமைப்புகள், சுராசந்த்பூா் மற்றும் பொ்ஸால் மாவட்டங்களைச் சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

3 போ் கைது: மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி குகி-மைதேயி ஆகிய சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததோடு ஆயிரக்கணக்கானோா் இடம்பெயா்ந்தனா். தற்போது மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தடை செய்யப்பட்ட மூன்று வெவ்வேறு அமைப்புகளைச் சோ்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.