சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரெளடி சுட்டுப் பிடிப்பு!

சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரெளடியை போலீசார் வெள்ளிக்கிழமை சுட்டுப் பிடித்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரை கடந்த வாரம் வெட்டிக் கொலை செய்ய வந்த கூலிப்படை கும்பலை வேளச்சேரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் முக்கிய குற்றவாளியை மாதவரம் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கூலிப்படை கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கும்பலின் பின்புலத்தில் பிரபல ரெளடியான தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா என்பவர் இருப்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே தூத்துக்குடி, திருநெல்வேலி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவரைத் தூத்துக்குடி போலீசார் தீவிரமாக தேடி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மகாராஜாவை பிடிப்பதற்கு சென்னை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அவர் திருநெல்வேலி பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் திருநெல்வேலி அருகே வைத்து மகாராஜாவை கைது செய்தனர்.
சென்னை அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இரு சக்கர வாகனம் ஒன்றை பயன்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனை பறிமுதல் செய்ய சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு இன்று அதிகாலை போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த இடத்தில் மகாராஜா மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தி மகாராஜாவை போலீசார் பிடித்துள்ளார். துப்பாக்கியால் சுட்டதில் மகாராஜாவின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், இவர் மீது கொள்ளை, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சென்னையில் அதிகாலையில் ரெளடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.