ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்: முதல் சோதனை வெற்றி.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இயக்கப்படவுள்ள ஓட்டுநரில்லா ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனது திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ஓட்டுநரின்றி இயக்கப்படும் ரயில்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கென தலா மூன்று ரயில் பெட்டிகளைக் கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
அப்பணிகளுக்காக ரூ.36,575.3 மில்லியன் (566.65 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளிகள் பிஇஎம்எல் (BEML) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதையொட்டி, ஓட்டுநரில்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. மூன்று பெட்டிகள் கொண்ட ஓட்டுநரில்லா ரயில், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் பூந்தமல்லி ரயில் முனையத்துக்குக் கட்டங்கட்டமாகக் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையத்திலிருந்து முல்லைத் தோட்டம் நிலையம் வரை ஓட்டுநரின்றி இயக்கப்பட்ட மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக தினமலர் ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான காணொளியை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தது.