5 ஆண்டுகளில் 507 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.

தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 507 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும், இது தொடர்பாக 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரையைச் சேர்ந்த என்.ஜி.மோகன் என்பவர், அம்மாவட்டத்தில் 2020 முதல் 2024ஆம் ஆண்டு வரை தடுக்கப்பட்ட குழந்தைத் திருமணங்கள் எத்தனை என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்களைக் கோரி, மதுரை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் மனு அளித்தார்.

அதற்கு அதிகாரி அளித்துள்ள பதிலில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய என்.ஜி.மோகன், கடந்த 2020ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணம் தொடர்பாக அதிகாரிகளுக்கு 79 அழைப்புகள் வந்ததாகவும் அதன்மூலம் 60 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்ததாகவும் அவர் கூறினார்.

“கடந்த 2021ல் கிடைக்கப்பெற்ற 183 தகவல்களில் 145 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 38 வழக்குகள் பதிவாகின. இதேபோல், 2022ஆம் ஆண்டு 86 திருமணங்களும் 2023ல் 81 திருமணங்களும் தடுக்கப்பட்டன.

“கடந்த 2024 நவம்பரில் 135 திருமணங்களைத் தடுத்த நிலையில், 36 வழக்குகளைக் காவல்துறை பதிவு செய்துள்ளது.

“மத்திய, மாநில அரசுகள் உரிய நிதி ஒதுக்கீடு செய்து, குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதுடன், அதிகரிக்கும் போக்சோ வழக்குகளைக் குறைக்கவேண்டும்,” என்று என்.ஜி.மோகன் வலியுறுத்தி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.