மாணவிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதியர் ஏழு ஆண்டுகளுக்குப் பின் கைது.

பள்ளி மாணவிகளை மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையிடம் பிடிபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. அங்கு இட்லி கடை நடத்தி வந்துள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இவரது கடையில் இட்லி வாங்க வந்த 13 வயது மாணவி ஒருவர், தனலட்சுமியும் அவரது கள்ளக்காதலன் ஆனந்தராஜும் உல்லாசமாக இருப்பதைப் பார்த்துவிட்டாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, அந்த மாணவியை யாரிடமும் இதுகுறித்துச் சொல்லக்கூடாது என்று மிரட்டியதுடன், ஆனந்த்ராஜுடன் கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்க வைத்துள்ளாள்.
மேலும், ஆனந்த்ராஜின் நண்பர்களும் அம்மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகத் தெரிகிறது.
அதன் பின்னர் மாணவியின் 14 வயது தோழியையும் அழைத்துவரச் செய்து ஆனந்த்ராஜுக்கு இரையாக்கினார் தனலட்சுமி.
மேலும் பலர் அவ்விரு மாணவிகளையும் சீரழித்த நிலையில், இறுதியாக அரியலூரைச் சேர்ந்த சதீஷ்குமார், தமிழரசி தம்பதியரிடம் மாணவிகள் விற்கப்பட்டனர்.
இருவரையும் அத்தம்பதியர் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகத் தெரிகிறது.
எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பிய மாணவிகள், திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதன் பேரில் 19 பேர் மீது வழக்குப் பதிவானது.
இவர்களில் 17 பேர் சிக்கிய நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சதீஷ்குமார், தமிழரசி தம்பதியர் தலைமறைவாகிவிட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிடிபட்டனர்.
கோவை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சதீஷ்குமாரும் திருவண்ணாமலையில் வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த தமிழரசியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.