வெளிநாடுகளில் 49 இந்தியருக்கு மரண தண்டனை.

எட்டு வெளிநாடுகளில் 49 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆக அதிகமாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) மட்டும் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இத்தகவலை வியாழக்கிழமை (மார்ச் 20) நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்தார்.
சவூதி அரேபியா (11), மலேசியா (6), குவைத் (3), இந்தோனீசியா, கத்தார், அமெரிக்கா, ஏமன் (தலா ஒன்று) ஆகியவை இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ள மற்ற நாடுகள்.
அத்துடன், விசாரணைக் கைதிகள் உட்பட மொத்தம் 10,152 இந்தியர்கள் வெளிநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் சிறைகள் உட்பட, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்துவருவதாக அவர் கூறினார்.
“மரண தண்டனையை எதிர்நோக்குவோர் உட்பட, வெளிநாட்டு நீதிமன்றங்களால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்களுக்கு ஆன அனைத்து உதவிகளையும் அந்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் வழங்கிவருகின்றன. சிறைகளுக்கு நேரில் சென்று அவர்களைப் பார்ப்பது, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், அரசுத் தரப்பு வழக்கறிஞர் குழு, உரிய மற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பதையும் அவை உறுதிசெய்கின்றன. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தல், கருணைமனு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் அவர்களுக்குச் சட்டவழி ஆதரவு வழங்கப்படுகிறது,” என்று அமைச்சர் விளக்கினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் மலேசியா, குவைத், ஸிம்பாப்வே, சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்ற 2024ஆம் ஆண்டு குவைத்திலும் சவூதியிலும் தலா மூன்று இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது; ஸிம்பாப்வேயில் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். முந்திய 2023ஆம் ஆண்டில் குவைத், சவூதி நாடுகளில் தலா ஐந்து இந்தியர்களுக்கும் மலேசியாவில் ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.