இளையர்களை கஞ்சா வியாபாரிகளாக மாற்றிய இன்ஸ்டகிராம் காதல்.

இன்ஸ்டகிராம் மூலம் இளையர்களிடம் காதல் மொழிகளைப் பேசி, அவர்களை கஞ்சா வியாபாரிகளாக மாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாயல் தாஸ் என்ற பெண், கடந்த மூன்று ஆண்டுகளாகச் சென்னையில் தங்கியிருந்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இவர் திரிபுரா மாநிலம் உதய்பூர் பகுதியைச் சேர்ந்தவர். திருமணமாகி ஒரு குழந்தையும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் திரிசூலம் பகுதியில் காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பாயல் தாஸ் சந்தேகத்துக்குரிய வகையில் அங்கு நடமாடியதைக் கண்டனர்.
இதையடுத்து, அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் அவர் மீதான சந்தேகம் அதிகரிக்கவே, அவரிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனையிட்டனர். அதில் மூன்று கிலோ கஞ்சா அடங்கிய உறை இருப்பது தெரியவந்தது.
தீவிர விசாரணையில், சென்னையில் இருந்தபடி பல இளையர்களைக் கைப்பேசி, இணையம் வழி தொடர்புகொண்டு பேசி, தன் காதல் வலையில் விழவைத்ததாகக் கூறியுள்ளார் பாயல்.
மூளைச்சலவை செய்யப்பட்ட பல இளையர்கள், இவரால் கஞ்சா வியாபாரிகளாக மாறியதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாயலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்த காவல்துறையினர், அவரால் ஏமாற்றப்பட்ட இளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.