299 பேரைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக்கொண்ட மருத்துவர்.

நூற்றுக்கணக்கான நோயாளிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னாள் அறுவை சிகிச்சை மருத்துவர், 299 நோயாளிகளை அவ்வாறு செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார் என்று அவருடைய வழக்கறிஞர்களில் ஒருவர் வியாழக்கிழமை (மார்ச் 20) தெரிவித்தார்.
ஜோலஸ் குவெனெக், 74, என்ற அம்மருத்துவரால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்.
பிரான்சின் ஆகப் பெரிய பாலியல் வழக்குகளில் ஒன்றான இது குறித்த விசாரணை இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கிழக்குப் பிரெஞ்சு நகரமான வேனில் நடந்து வருகிறது.
தம்முடைய நோயாளிகளைப் பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்கொடுமை செய்ததாக ஜோலஸ்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் மயக்கத்தில் இருந்தபோது அல்லது அறுவை சிகிச்சைக்குப்பின் கண்விழித்தபோது அவர்களை ஜோலஸ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த 1989ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுவரை பல்வேறு மருத்துவமனைகளில் அவரது கொடுமைகள் அரங்கேறின.
இந்நிலையில், இதுவரையிலும் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோலஸ், இப்போது தன்மீதான 299 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
நோயாளிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதைத் தமது மடிக்கணினியிலும் அவர் காணொளிகளாகப் பதிவுசெய்திருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டில், தம்முடைய உறவினர்கள் இருவர் உட்பட நான்கு குழந்தைகளைத் துன்புறுத்திய குற்றத்திற்காக ஜோலஸ் இப்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
2017ஆம் ஆண்டில் தமது பணியிலிருந்து ஓய்வுபெறும்வரை தொடர்ந்து அவர் வேலை செய்துவந்தார். ஆறு வயதுச் சிறுமி ஒருத்தி அவர் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து, அவரது கணினிகளில் இருந்த துன்புறுத்தல் காணொளிகளைக் காவல்துறை கண்டுபிடித்தது.