நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் இடையே பல ஆண்டு பணப்பரிவர்த்தனை அம்பலம்.

இலங்கையில் பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக கொழும்பு நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விரைவில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார் என்று கூறப்படும் நடிகை பியூமி ஹன்சமாலி, மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் பல ஆண்டுகளாக பணப்பரிவர்த்தனை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொலிஸ் அதிகாரி சம்பத் ராஜகருணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தற்போது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், விசாரணைக் கைதி ஒருவர் ஹன்சமாலிக்கு பத்து மில்லியன் ரூபாய் பணத்தை வழங்கியதாகவும், ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ கார் ஒன்று கடத்தல்காரரின் வீட்டில் இன்னும் இருப்பதாகவும், அந்தக் காருக்கு ஹன்சமாலி இருபது மில்லியன் ரூபாய் மதிப்புள்ள லீசிங் ஒன்றை எடுத்துள்ளதாகவும், இவை அனைத்தும் ஹன்சமாலி மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
ஹன்சமாலி 34,786 வாடிக்கையாளர்களுக்கு க்ரீம் விற்பனை செய்துள்ளார். ஆனால் உண்மையில் அவர் க்ரீம் விற்பனை செய்தாரா அல்லது வேறு ஏதும் விற்பனை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
ஹன்சமாலியின் க்ரீம் வாடிக்கையாளர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, வணிகத்திற்கு இடையூறு செய்வதாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, பொலிஸ் அதிகாரி இந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு கூடுதல் நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
பிந்திய விபரமான தகவல்கள் :
மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகை பியூமி ஹன்சமாலிக்கு எதிரான விசாரணை கொழும்பு கூடுதல் மாஜிஸ்திரேட் மஞ்சுள ரத்நாயக்கா முன்னிலையில் மார்ச் 21ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. முன்னர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தலைவர் சம்பத் ராஜகருணா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பியூமி ஹன்சமாலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுமுது ஹேவகே நீதிமன்றத்தில் வாதிடும்போது, தனது வாடிக்கையாளர் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருவதாகவும், தற்போது வரை 34,506க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கூரியர் மூலம் பொருட்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது வாடிக்கையாளர் குறைந்த விலையில் அழகு சாதனப் பொருட்களை வாங்கி 30,000 முதல் 40,000 வரை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நேற்று அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறானது என்றும் இதனால் தனது வாடிக்கையாளரின் வணிகத்திற்கு பெரும் தீங்கு விளைவிப்பதாகவும் வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார்.
மேலும் தனது வாடிக்கையாளரிடம் இருந்து அழகு சாதனப் பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்களை அழைத்து போலீசார் விசாரித்து வருவதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் பயந்து பொருட்களை வாங்குவதை விட்டுவிட்டு, தனது வாடிக்கையாளரின் வணிகத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருவதாகவும் வழக்கறிஞர் கூறினார்.
முழுநேர நடிகையாக இருக்கும் தனது வாடிக்கையாளர் ஒரு தொழிலதிபராக முன்னேறுவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய வழக்கறிஞர், “அம்பாபாலிகா இன்று இருந்திருந்தால், அவரால் துறவியாகியிருக்க முடியாது” என்று கூறினார். எனவே, தனது வாடிக்கையாளரின் வணிகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விசாரணையை நடத்துவதைத் தடுக்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வாதிட்ட சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தலைவர், பியூமி ஹன்சமாலி 30,000க்கும் அதிகமானோருக்கு கூரியர் மூலம் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறியுள்ளார்.
2023 நவம்பர் 22ஆம் திகதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு பெரிய கொக்கைன் கடத்தல்காரரை கைது செய்தது. விசாரணையில், கடத்தல்காரருக்கும் ஹன்சமாலிக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் இன்னும் கடத்தல்காரரின் வீட்டில் இருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
எனவே, பியூமி ஹன்சமாலி கூரியர் மூலம் விற்றது உண்மையில் அழகு சாதனப் பொருட்களா அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோதப் பொருட்களா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த கூடுதல் மாஜிஸ்திரேட், விசாரணைக்காக மக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்பதை தான் ஒப்புக்கொள்வதாகக் கூறினார். ஹன்சமாலிக்கு எதிரான விசாரணை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடைபெறுவதால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரது வணிகத்திற்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
1992ஆம் ஆண்டு பிறந்த பியூமி ஹன்சமாலி கோமஸ் 2010-2011ஆம் ஆண்டுகளில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது ஒரு குழந்தைக்கு தாயான அவர் தனியாக குழந்தையை வளர்க்கும் ‘சிங்கிள் அம்மா’ என்று சமூகத்தில் பிரபலமாக இருந்தார்.
2014ஆம் ஆண்டு தனது முதல் தொலைக்காட்சி தொடரில் நடித்தார். 2018ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடித்தார். 2019ஆம் ஆண்டு மலையாள திரைப்பட இயக்குனர் அனில் குமார் இயக்கிய படத்தில் ஜாக்சன் அண்டணியுடன் இணைந்து நடித்தார். இந்த காலகட்டத்தில், சர்வதேச மாடல் போட்டிகளில் கலந்து கொண்டார். விளம்பரங்கள் மற்றும் பாடல் வீடியோக்களிலும் தோன்றினார்.
சமூக ஊடகத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் இவருக்கு பேஸ்புக்கில் 577,000 பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 2.2 மில்லியன் பின்தொடர்பவர்களும், டிக்டாக்கில் 1.6 மில்லியன் பின்தொடர்பவர்களும் உள்ளனர். தற்போது, அவர் சருமத்தை வெண்மையாக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பியூமி ஹன்சமாலி வாங்கியதாகக் கூறப்படும் ரேஞ்ச் ரோவர் காரையும், சொகுசு வீட்டையும் வாங்க அவருக்கு எப்படி பணம் கிடைத்தது என்பதே புகார்தாரரின் முக்கிய கேள்வி. அவர் சம்பாதித்த சொத்துக்களுக்கு வருமான வரி செலுத்தியுள்ளாரா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று ‘மகேன் ரடட’ அமைப்பின் செயலாளர் சஞ்சய மஹவத்த கூறினார்.
“2023 மார்ச் 7ஆம் தேதி பியூமி ஹன்சமாலி பிரகீத் என்பவருடன் வந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய சிடிஎம் 1949 ரேஞ்ச் ரோவர் காரை வாங்கினார். அந்த கார் 7.8 மில்லியன் ரூபாய் மதிப்புடையது என்று அவர் கூறுகிறார்” என்று சஞ்சய மஹவத்த கூறினார்.
அந்த காரின் உரிமையாளர் மதுர விக்ரமரத்ன என்றும், அவர் 40 ஆண்டுகளாக ராணுவத்திற்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தை வைத்திருப்பவர் என்றும் சஞ்சய கூறினார். அந்த காரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்த உரிமையாளர் வழங்கியதாகவும், இது குறித்து சந்தேகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான 9 வங்கிகளில் உள்ள 20 கணக்குகளின் விவரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆறு மாதங்களில் அவரது கணக்குகளில் சுமார் 30 கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்ததாகவும் சஞ்சய தெரிவித்தார்.
சஞ்சய மஹவத்த தலைமையிலான குழு தாக்கல் செய்த புகாரில் இரண்டாவது விஷயம், கடந்த ஆண்டு பியூமி ஹன்சமாலி வாங்கிய சொகுசு வீடு. “கடந்த ஆண்டு, அவர் ‘தி கிராண்ட்’ அடுக்குமாடி குடியிருப்பில் 148 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டை வாங்கினார். கடந்த ஆண்டு 15 தவணைகளில் பணம் செலுத்தப்பட்டது. 2023 டிசம்பர் 12ஆம் தேதி, அவர் கடைசி தவணையாக 40 மில்லியன் ரூபாய் செலுத்தினார்,” என்று சஞ்சய கூறினார்.