“மக்களின் பக்கம் நிற்க நான் விரும்புகிறேன்… பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவிப்பு!”

நேற்று முன்தினம் (21) 114 வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட , 2025 ஒதுக்கீட்டு மசோதாவின் மூன்றாம் வாசிப்பின் போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த ஒரே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், இந்த முடிவை மக்களின் பக்கத்திலிருந்து யோசித்து எடுத்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய அதிகாரத்திற்கு எதிராக செயல்படுவதை விட மக்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கூறியுள்ளார்.
“இது அரசாங்கத்தின் முதல் பட்ஜெட். மக்கள் அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். நம் நாட்டு மக்களின் கருத்து மற்றும் விருப்பத்துடன் தான் நானும் செயல்படுகிறேன். அதனால் தான் நானும் ஆதரவாக வாக்களித்தேன்.”
“அரசாங்கம் மக்கள் நினைத்தபடி செயல்படுமா என்று நாம் பார்ப்போம். மக்கள் கொடுத்த அதிகாரத்திற்கு எதிராக செயல்படுவதை விட மக்களுக்கு ஆதரவளிப்பது தான் நாம் செய்ய வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான், இந்த முறை தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.