2 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிரோடு திரும்பி வந்ததால் அதிர்ச்சி!

2 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிரோடு திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் லலிதா பாய். இந்த பெண் கடந்த 2023-ம் ஆண்டில் காணாமல் போயுள்ளார்.
அந்த நேரத்தில் லொறி விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த வீடியோ வெளியானது. அப்போது, உயிரிழந்த பெண்ணின் டாட்டூவை பார்த்த அவரது குடும்பத்தினர் இது லலிதா பாய் என்று கூறினர்.
பின்னர், கொலை செய்யப்பட்டதாக கூறி அந்த பெண்ணை லலிதா பாய் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த கொலை வழக்கில் இம்ரான், ஷாருக், சோனு, எஜாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் லலிதா பாய் மீண்டும் உயிரோடு திரும்பி வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து லலிதா பாயிடம் விசாரிக்கும் போது, “ஷாருக் என்ற நபர் தன்னை ரூ.5 லட்சத்திற்கு ஒருவரிடம் விற்பனை செய்தார். பின்னர், என்னை ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவிற்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், என்னிடம் செல்போன் இல்லாததால் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது, நான் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்” என்றார்.