ஹரியாணா மாநிலம் பஹதூர்காரில் வீட்டில் நேர்ந்த வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

ஹரியாணா மாநிலம் பஹதூர்காரில் உள்ள வீட்டில் நேர்ந்த வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் சந்தேகிக்கும் நிலையில், வெடி விபத்து படுக்கையறையில் நேர்ந்ததால் அதற்கான சாத்தியக்கூறு இல்லையென்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை துணை ஆணையர் மயங்க் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து அல்ல, படுக்கையறையில் நடந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீக்கறையாகியுள்ளது.

இவ்விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்; ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.” என்றார்.

வெடி விபத்துக்கான காரணத்தை அறிய, வெடிகுண்டு நிபுணர்களையும் தடவியல் ஆய்வகத்தின் குழுவையும் காவல் துறையினர் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக மயங்க் மிஸ்ரா தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.