சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி அதிரடியின் உச்சமாக அமைந்தது.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போராட்டத்தை வெளிப்படுத்தினாலும் 242 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 528 ரன்கள் குவித்தன. 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.
அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இஷான் கிஷன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துருவ் ஜுரல் தலா ஆறு சிக்ஸர்களை அடித்து இருந்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இஷான் கிஷன் 47 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்தார். டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 287 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடியபோது சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சஞ்சு சாம்சன் 37 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். துருவ் ஜூரல் இப்படி விளையாடுவாரா என வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஆட்டத்தை ஆடினார். 35 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மையர் 23 பந்துகளில் 42 ரன்களையும், சுபம் துபே 11 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தனர். எனினும் வெற்றிக்கு தேவையான ரன்கள் மிக அதிகமாக இருந்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை.
20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.