இஸ்ரேலியத் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சாலா அல்-பர்தாவீல் கொல்லப்பட்டார்

காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய ஆகாயப் படைத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரான சாலா அல்-பர்தாவீல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் அரசியல் அலுவலகத்தைச் சேர்ந்த பர்தாவீல் கொல்லப்பட்டதை ஹமாசுக்குச் சாதகமான ஊடகம் ஒன்று தெரிவித்தது. தாக்குதலில் பர்தாவீலின் மனைவியும் கொல்லப்பட்டதாக அது குறிப்பிட்டது.
இதுகுறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாகக் கருத்து வெளியிடவில்லை. ஹமாசின் ஊடக ஆலோசகரான தாஹெர் அல்-நோனோ, பர்தாவீலின் மரணத்துக்கு ஃபேஸ்புக்கில் வருத்தம் தெரிவித்தார்.
இம்மாதம் 18ஆம் தேதி இஸ்ரேல், காஸா மீது மறுபடியும் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாத காலத்துக்கு நடப்பில் இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. தாங்கள் அவ்வாறு செய்ததற்கு ஹமாஸ்தான் காரணம் என்று இஸ்ரேல் குறைகூறி வருகிறது.
வட, மத்திய, தென் காஸா பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை பலமுறை வெடிப்புச் சத்தம் கேட்டது. அப்பகுதிகளின் பல இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது.
பர்தாவீல், தனது மனைவியுடன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்ததாகவும் அப்போது அவர்கள் இருந்த கூடாரம் இஸ்ரேலிய ஏவுகணையால் தாக்கப்பட்டதாகவும் ஹமாஸ் அறிக்கை ஒன்றில் கூறியது. பர்தாவீலை இஸ்ரேல் கொன்றுவிட்டதாக ஹமாஸ் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியது.