ஹீத்ரோ விமான நிலைய மூடல்: விசாரணைக்கு உத்தரவிட்டது பிரிட்டன்!

பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் சனிக்கிழமை (மார்ச் 22) முழுமையாகச் செயல்படத் தொடங்கியது.
ஐரோப்பாவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த விமான நிலையம் ஒருநாள் முழுவதும் மூட நேர்ந்த காரணம், மின்சாரத் தடையை விமான நிலையம் எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல விமான நிறுவனங்கள், மேலும் பயண தாமதம், பயண ரத்து போன்றவை நிகழக்கூடும் என எச்சரித்துள்ளன.
ஹீத்ரோ விமான நிலையத்தை மையமாகப் பயன்படுத்தும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மார்ச் 22ஆம் தேதி கிட்டத்தட்ட 90 விழுக்காடு பயணங்களை தாமதம் இன்றி மேற்கொண்டதாகக் கூறியது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) அனைத்துப் பயணங்களும் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி கூறியது.
இதற்கிடையே, நாட்டின் முக்கியமான கட்டமைப்பு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரிட்டிஷ் எரிசக்தி அமைச்சு மின்சாரத் தடை ஏற்பட்டது குறித்து விரைவில் விசாரணை நடத்துமாறு தனது தேசிய எரிசக்தி அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஹீத்ரோ விமான நிலையம், முன்னாள் போக்குவரத்து அமைச்சரும் தனது இயக்குநர் சபையின் சுயேச்சை உறுப்பினருமான ரூத் கெல்லி என்பவரை, விமான நிலையம் நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும் முறையை ஆராய்ந்து அதன் மீள்திறனை மேம்படுத்தும் வழிகளைக் கண்டறியுமாறு பணித்துள்ளது.
ஐரோப்பிய விமான நிலையங்கள் இதுபோன்ற ஒரு பெரிய நெருக்கடி நிலையை 2010ஆம் ஆண்டு எதிர்கொண்டன. அந்த ஆண்டு ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து அதன் எரிமலைச் சாம்பல் தூசு பரவியதால் கிட்டத்தட்ட 100,000 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதை ஆகாயத் துறை வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.