லடாக்கில் இரு மாவட்டங்களை உருவாக்கிய சீனா : இந்தியா எதிர்ப்பு

இந்தியாவின் லடாக் பகுதியில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து இரு மாவட்டங்களை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் இந்தச் செயலுக்குத் தூதரகம் மூலம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
லடாக்கில் இந்திய பகுதியை இணைத்து ஹோட்டன் என்ற பகுதியில் இரு மாவட்டங்களைச் சீனா உருவாக்கியுள்ளது பற்றியும் அப்பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தூதரகம் மூலம் எடுத்த நடவடிக்கை குறித்தும் இந்திய மக்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு, “சீனாவின் ஹோட்டன் பகுதியில் இரு மாவட்டங்களை அந்நாடு உருவாக்குவது குறித்து மத்திய அரசுக்குத் தெரியும். இந்த மாவட்டங்களின் சில பகுதிகள், இந்தியாவின் லடாக் பகுதிக்குள் வருகின்றன. இதற்கு தூதரகம் மூலமாக இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்திய பகுதியில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்திய அரசு ஒருபோதும் ஏற்காது,” என இணையமைச்சர் பதிலளித்தார்.