அதானி திட்டத்தை தொடர முடியாதது வருத்தமளிக்கிறது: ரணில் விக்கிரமசிங்க

மன்னாரில் உள்ள அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை தொடர முடியாதது குறித்து வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்திய முதலீட்டாளர்கள் உட்பட இலங்கை அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட திட்டத்தை மறுபரிசீலனை செய்ய திசைகாட்டி அரசாங்கம் முயற்சிப்பதன் பின்னணியில் உள்ள நியாயம் என்ன என்று முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலைமை எதிர்கால பெரிய அளவிலான முதலீட்டு திட்டங்களுக்கு தடையாக இருக்கும் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
தனது அரசாங்கம் அறிமுகப்படுத்திய கொள்கைகளை அரசாங்கம் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த முன்னாள் ஜனாதிபதி, ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்டு ஆசியாவை நோக்கி உலகளாவிய அதிகார மாற்றம் நிகழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கை அதிலிருந்து பயனடைய எதிர்பார்க்க வேண்டும் என்றார்.