கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன? சுவிசிலிருந்து சண் தவராஜா

உலகில் மிகப் பாரிய தீவான கிறீன்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிய நிலையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளது. கிறீன்லாந்தின் கேந்திர முக்கியத்துவ அமைவிடம், அந்தத் தீவில் உள்ள பாரிய அளவிலான கனிம வளங்கள் என்பவை அந்த நாட்டுக்கு ஒரு முக்கியத்துவத்தைத் தந்த போதிலும், இரண்டாவது தடவையாக அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் கிறீன்லாந்து தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்தும் அந்த நாட்டின் மீது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது.

வெறும் 57,000 குடிமக்களைக் கொண்ட அந்த நாடு டென்மார்க் அரசாங்கத்தின் கீழ் அரைச் சுயாட்சி நாடாகச் செயற்பட்டு வருகின்றது. ஆர்ட்டிக் மற்றும் அட்லான்டிக் சமுத்திரங்களின் மத்தியில் அமைந்துள்ள கிறீன்லாந்து கடந்த 300 வருடங்களாக டென்மார்க்கின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது. உள் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு மாத்திரமே கிறீன்லாந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க பொருண்மியம், வெளி விவகாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை டென்மார்க் தன் கையில் வைத்திருக்கிறது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் 40,000க்கும் சற்று அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 31 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் ஆறு அரசியல் கட்சிகள் போட்டியிட்டிருந்தன. மார்ச் 11ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தீவு முழுவதிலும் 72 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 28,620 பேர் வாக்களித்திருந்த இந்தத் தேர்தலில் ஐந்து கட்சிகளால் மாத்திரமே நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்தது.

கடந்த ஆட்சியில் எதிர்க் கட்சி வரிசையில் இருந்த ஜனநாயகக் கட்சி 30.26 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இந்தத் தேர்தலில் சாதனை படைத்துள்ளது. இந்தக் கட்சியின் சார்பில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். இந்தக் கட்சியின் தலைவரான ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் அடுத்த தலைமை அமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாம் இடத்தில் உள்ள நலரக் கட்சி (திசைகாட்டி) 24.77 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. இந்தக் கட்சியின் சார்பில் எட்டு உறுப்பினர்கள் தெரிவாகினர். கடந்த தேர்தலில் மிகப் பாரிய கட்சியாக வெற்றி பெற்றிருந்த மக்கள் சமூகக் கட்சி 21.62 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஏழு ஆசனங்களை மாத்திரம் வென்றுள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வீதத்தில் 15.82 விழுக்காடு வாக்குகளை இந்தக் கட்சி இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்று ஆட்சியில் இடம்பிடித்திருந்த முன்நோக்குக் கட்சி 14.88 விழுக்காடு வாக்குகளுடன் நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 15.22 விழுக்காடு வாக்குகளை இழந்துள்ள இந்தக் கட்சியின் தலைவர் எரிக் ஜென்சன் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த தினமே தனது தலைமைப் பதவியைத் துறப்பதாக அறிவித்துள்ளார்.

சமூகத்தின் உணர்வு என்ற பெயரிலான கட்சி 7.39 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. பண்டைய கால எண்ணெய் விளக்கைக் குறிக்கும் குல்லெக் என்ற பெயரிலான புதிய கட்சி 1.08 விழுக்காடு வாக்குகளை மாத்திரமே பெற்றது. இதன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தெரிவாகவில்லை. கிறீன்லாந்து தேர்தல் சட்டங்களின் படி மூன்று விழுக்காட்டுக்குக் குறைவான வாக்குகளைப் பெறும் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

ஒரு சிறிய நாட்டின் அதிலும் முழுமையான இறைமை பெறாத ஒரு அரைச் சுயாட்சி நாட்டின் தேர்தலில் முடிவுகளில் உலக மாந்தருக்கு பெரிதாக என்ன அக்கறை இருந்துவிட முடியும் என்ற கேள்வி வாசகர்களுக்குத் தோன்றக் கூடும். இன்றைய பூகோள அரசியல் சூழலோடு ஒப்பிட்டே இதற்கான பதிலைக் காண முடியும்.

பூகோள அடிப்படையில் வட அமெரிக்கக் கண்டத்திலேயே கிறீன்லாந்து அமைந்திருந்தாலும் வரலாற்று அடிப்படையில் அந்தத் தீவு தன்னை ஐரோப்பியக் கண்டத்துடனேயே தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி வந்திருக்கின்றது. சற்றொப்ப 4,500 வருட கால வரலாற்றைக் கொண்ட இந்தத் தீவு நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் இணைந்த ஆட்சியின் கீழ் இருந்து பின்னாளில் டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் வந்தது. கிறீன்லாந்தின் தற்போது செயற்பட்டுவரும் அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை டென்மார்க்கில் இருந்து சுதந்திரம் பெற்று ஒரு தனிநாடாக கிறீன்லாந்து விளங்க வேண்டும் என்ற இலட்சியத்துடனேயே செயற்பட்டு வருகின்றன.

இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் நாஸிப் படைகள் டென்மார்க்கைக் கைப்பற்றின. இதனையடுத்து 1940 ஏப்ரல் 9இல் டென்மார்க்குக்கும் கிறீன்லாந்துக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. 1941 ஏப்ரல் 8இல் அமெரிக்கா கிறீன்லாந்தைக் கைப்பற்றிக் கொண்டது. அங்கே தனது படைத் தளங்களை அமைத்துக் கொண்டது.

வட துருவத்தை மிகவும் அண்டிய ஒரு நாடான கிறீன்லாந்தில் கனிம வளங்கள் அபரிமிதமாக உள்ளன. பெரும்பாலும் பனி மூடிய பிரதேசங்களாக அவை உள்ள நிலையில் அவற்றை அகழ்ந்து எடுப்பது கடினமாக உள்ளது. தற்போதைய புவி வெப்பமடைதல் போக்கு காரணமாக அந்த நாட்டில் உள்ள பனிப் பாளங்கள் உருகத் தொடங்கிய நிலையில் வல்லரசுகளின் கழுகுப் பார்வை குறிப்பாக அமெரிக்காவின் பார்வை கிறீன்லாந்து மீது வலுவாகப் பதிந்துள்ளமையைப் பார்க்க முடிகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது ஆசையை மறைத்து வைக்க விரும்பாமல் கிறீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது தொடர்பிலான தனது விருப்பத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்திய நிலையில் அது உலகின் பேசுபொருளாக மாறியது.

ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கைகள் காரணமாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் ஒரு விரிசல் உருவாகியுள்ள நிலையில் கிறீன்லாந்து விவகாரம் அந்த விரிசலை மேலும் விரிவு படுத்துமா என்பதே இன்றுள்ள கேள்வி. கிறீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பில் ட்ரம்ப் உண்மையிலேயே கரிசனை கொண்டிருக்கிறாரா இல்லை பரபரப்புக்காக அது பற்றிப் பேசினாரா என்பதுவும் புரியவில்லை. டென்மார்க் அரசாங்கமும், கிறீன்லாந்தின் பெரும்பான்மை மக்களும் அமெரிக்காவுடன் இணைந்து கொள்வதை விரும்பாத நிலையில் ஜனநாயக வழிமுறைகள் ஊடாக தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு ட்ரம்புக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நினைக்கும் ட்ரம்ப் சாத்தியமான சகல வழிகள் ஊடாகவும் அதனைச் சாதிக்க முயற்சி செய்கிறார் என்பதை அண்மையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியுடன் ஓவல் மாளிகையில் நடத்திய சந்திப்பின் ஊடாக தெளிவாகப் பிரகடனம் செய்துவிட்டார். தனது ஐரோப்பியக் கூட்டாளிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தனது நடவடிக்கைகள் தொடரும் என்பதையும் பல்வேறு செயற்பாடுகள், அறிக்கைகள் ஊடாகத் தெளிவுபடுத்தி வருகின்றார். அவர் கிறீன்லாந்து விடயத்தில் இனி எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள முழு உலகுமே ஆவலாக உள்ளது. அவரது நடவடிக்க எதுவானாலும் அதனை எதிர்கொள்ளும் இடத்தில் கிறீன்லாந்தில் அமையப் போகும் புதிய அரசாங்கம் உள்ளது என்பதே யதார்த்தமான உண்மை.

Leave A Reply

Your email address will not be published.