காணொளி பார்த்தபடி பேருந்தை ஓட்டியவர் பணியிடைநீக்கம்.

கைப்பேசியில் காணொளி பார்த்தபடி வாகனத்தை இயக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 21) இரவு அரசுப் பேருந்து ஒன்று கரூருக்குக் கிளம்பிச் சென்றது.

அதன் ஓட்டுநர் ஒரு கையில் கைப்பேசியைப் பிடித்தபடி காணொளி பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியதாகக் கூறப்பட்டது. அதுகுறித்த காணொளியும் இணையத்தில் பகிரப்பட, இணையவாசிகள் பலரும் அவரது செயலால் அதிர்ச்சி தெரிவித்தனர்.

அப்பேருந்தில் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 25 பேர் பயணம் செய்தனர்.

காணொளி பார்த்தபடி பேருந்தை ஓட்டவேண்டாம் என்று பயணிகளில் சிலர் கண்டித்ததை அடுத்து, பேருந்து ஓட்டுநர் கைப்பேசியில் காணொளி பார்ப்பதை நிறுத்தினார். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் கைப்பேசி அவரது கைக்குச் செல்ல, கண்கள் சாலையையும் கைப்பேசியையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தன.

இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள், என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே பயணம் செய்ய வேண்டியதாயிற்று.

இதனிடையே, சமூக ஊடகங்களில் காணொளி பரவியதை அடுத்து, அந்தக் குறிப்பிட்ட பேருந்து ஓட்டுநரிடம் கரூர் மண்டலப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடந்து, சரவணன் எனும் அந்த ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

வாகனங்களை இயக்கும்போது கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை நடப்பிலிருந்தும் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவரே அதனை மீறியிருப்பது குறித்துப் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.