Club Octapussy மோதல் : இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல முடிவு

கொழும்பு யூனியன் பிளேஸ் பார்க் வீதியில் உள்ள கிளப் ஆக்டோபஸ்ஸி இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் யோஷித ராஜபக்சவுடன் வந்த மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (22) அதிகாலையில் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட இந்த குழுவினர் கிளப் வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது, அடையாள கைபட்டிகளை அணியுமாறு கிளப் பாதுகாவலர்கள் கூறியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய இந்த சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளில் வசிப்பவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளதாகவும், இந்த சந்தேக நபர்கள் தற்போது அந்த பகுதிகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
யோஷித ராஜபக்சவுடன் வந்த குழுவினர் நடத்திய தாக்குதலில், அந்த இரவு விடுதியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த பல தரப்பினர் தலையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் நாளை (25) காவல் நிலையத்திற்குச் சென்று வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.