விஜித ஹேரத் அமெரிக்கா செல்லவிருப்பதாக வெளியான செய்தி தவறானது என மனோ கணேசனிடம் கூறிய ஜூலி சங்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்து விரிவாக பேசப்பட்டது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்கா செல்லவிருப்பதாக வெளியான செய்தி தவறானது என்று மனோ கணேசனிடம் கூறினார்.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் குறித்து மனோ கணேசன் கூறுகையில், “இலங்கை அமெரிக்காவிற்கு 16 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது, இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 23 சதவீதம். ஆனால், அமெரிக்காவில் இருந்து 370 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே இலங்கை வாங்குகிறது. இந்த வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்ய, அமெரிக்காவில் இருந்து அதிக பொருட்களை இலங்கை வாங்க வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய ட்ரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக, அமெரிக்காவில் இருந்து பருத்தி ஆடை மூலப்பொருட்களை இலங்கை அதிகமாக வாங்கலாம் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்” என்றார்.

மேலும், மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமை பிரச்சினைகள் குறித்து பேசிய மனோ கணேசன், “இந்த பிரச்சினைகளில் தற்போதைய அரசு தெளிவான பார்வையை கொண்டிருக்கவில்லை. 2015-ம் ஆண்டு முதல் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்து வரும் காணி மற்றும் வீட்டு உரிமை போராட்டங்களுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என்றார்.

தேசிய நல்லிணக்கம், புதிய அரசியலமைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் உண்மை ஆணைக்குழு ஆகிய விவகாரங்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதுவரிடம் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

இலங்கை அரசு தற்போது பொருளாதார சீரமைப்பிற்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால், பொருளாதார சீரமைப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டும் என்று மனோ கணேசன் அமெரிக்க தூதுவரிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும், வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா வருவாய் மற்றும் ஏற்றுமதி ஆகிய விவகாரங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் பாரத் அருள்சாமி மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி செச் லோன்ஸ் மற்றும் அரசியல் நிபுணர் குரூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.