46 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மின்சார கட்டண நிலுவை ஒரு கோடியே பதினாறு லட்சம் ரூபாய்… உடனடியாக வசூலிக்க தணிக்கைத்துறை அறிவுறுத்தல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ வீடுகளுக்கு வழங்கப்பட்ட 46 மின் இணைப்புகளுக்கான நிலுவை மின் கட்டணங்கள் 11.66 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட வேண்டியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலுவைத் தொகை ஒரு வருடத்திற்கும் மேலாக வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், 5.29 மில்லியன் ரூபாய் ஐந்து வருடங்களுக்கும் மேலாக வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்றும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக 12.21 மில்லியன் ரூபாய் நிலுவை மின் கட்டணம் செலுத்தப்படாததால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ வீடுகளுக்கு வழங்கப்பட்ட 46 மின் இணைப்புகள் 2023 இல் துண்டிக்கப்பட்டு, கடன் வாங்கியவர்களாக வகைப்படுத்தப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்புகளிலிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தணிக்கைத்துறை பரிந்துரைத்துள்ளது.
நிலுவைத் தொகையை வசூலிக்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தணிக்கைத்துறைக்கு தெரிவித்துள்ளது.