யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை விழாவுக்கு புத்தசாசன அமைச்சர் வர மறுப்பு…. இராணுவமும் திரும்ப அழைப்பு.

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரையின் விகாரை மண்டப திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்ட புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அந்த அழைப்பை நிராகரித்ததாக பலங்கொட கஸ்ஸப தேரர் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், அந்த சந்தர்ப்பத்திற்கு வருகை தந்த மகா சங்கத்தினருக்கு தானம் வழங்குவதற்கும், ஏற்பாடுகளுக்கும் அழைக்கப்பட்டிருந்த இராணுவ குழுக்களும் உடனடியாக முகாம்களுக்கு திரும்ப அழைக்கப்பட்டன. இதனால் பகல் உணவுக்காக அந்த பிக்குகள் கடைகளுக்கு செல்ல வேண்டியிருந்தது.
இது மகா சங்கத்தினருக்கும் ஒட்டுமொத்த பௌத்த மக்களுக்கும் இழைக்கப்பட்ட பெரும் அவமானம் என்று கஸ்ஸப தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி பிரிவினைவாதக் குழுக்கள் விகாரைக்கு முன் போராட்டங்களை நடத்தியதாகவும், புத்த மதத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் கடமைப்பட்ட அரசாங்கம் வடக்கில் உள்ள பௌத்த புனிதத் தலங்களை ஆபத்தில் ஆழ்த்தி மக்களை ஏமாற்ற, தலதா கண்காட்சிகளை நடத்துகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.