இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் இலங்கை வருகை

இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவ சங்கத் தலைவர்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
நேற்று (25) இந்தியாவின் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் வந்த இந்த இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின் மற்றும் ஜெர்மேனியஸ் ஆவர்.
இலங்கை மீனவர்கள் சார்பில் சுப்பிரமணியம் (யாழ்ப்பாணம்), மரியா ராஜா (முல்லைத்தீவு), ஆலம் (மன்னார்), பிரான்சிஸ் (கிளிநொச்சி), அந்தோனி பிள்ளை (கிளிநொச்சி), சங்கர் (மன்னார்), ராமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), அன்னா ராஜா (யாழ்ப்பாணம்) மற்றும் வர்ணகுலசிங்கம் (யாழ்ப்பாணம்) உட்பட 12 பேர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.
இரு நாட்டு மீனவ தலைவர்களும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை தயாரிக்க உள்ளனர்.
அந்த அறிக்கையை , இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரும்போது அவரிடம் ஒப்படைப்பதற்கு மீனவ சங்க பிரதிநிதிகள் எதிர்பார்க்கின்றனர்.