நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி: தாய்லாந்து பிரதமரின் பதவி தப்பியது.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத்ரவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது.
பிரதமர் பேடோங்டார்ன், 38, தமது தந்தை தக்சின் ஷினவத்ராவின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
நாட்டை நல்லமுறையில் வழிநடத்தும் அனுபவம் பிரதமருக்கு இல்லை என்றும் அந்தக் கட்சிகள் கூறி வருகின்றன.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது இரண்டு நாள்கள் விவாதம் நடைபெற்ற பின்னர் புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 319 வாக்குகளும் தீர்மானத்தை ஆதரித்து 162 வாக்குகளும் பதிவாயின. ஏழு பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
அதனால், பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. பிரதமர் பேடோங்டார்ன், தமது பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்.
தம்மை ஆதரித்தும் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்த உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தம்மை ஆதரித்தும் எதிர்த்தும் அளிக்கப்பட்ட எல்லா வாக்குகளும் தம்மையும் தமது அமைச்சரவையையும் திறம்படப் பணியாற்ற ஊக்குவித்து இருப்பதாக அவர் கூறினார்.
பிரதமர் பேடோங்டார்னின் தந்தையான தக்சின் தம் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சட்டுகளில் இருந்து தப்பிக்க நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்தார்.
ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2023ஆம் ஆண்டு அவர் நாடு திரும்பினார்.