ரூ.200 கோடி வரி ஏய்ப்பு அம்பலப்படுத்திய வாட்ஸ்அப் செயலி.

வாட்ஸ் அப் செயலி உதவியுடன், கிரிப்டோ கரன்சி தொடர்பான கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி மசோதாவின் வெளியீட்டின்போது தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 26) உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா, நிதி மோசடிகளையும் வரி ஏய்ப்பையும் கையாள்வதற்கு மின்னிலக்கப் பதிவுகளை அதிகாரிகள் பெறுவது எளிதாக்கப்படுவது முக்கியம் எனக் கூறினார்.

கணக்குகளில் சேர்க்கப்படாத ரொக்கப்பணம் பதுக்கப்பட்டுள்ள இடங்களை கூகல் வரைபட மென்பொருள் கண்டுபிடிக்க உதவியதாக நிதியமைச்சர் நிர்மலா தெரிவித்தார்.

சொத்துகளை வாங்குவோரின் அடையாளத்தை மறைப்பதற்கான ‘பினாமி’ சொத்துரிமைகளைக் கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்டகிராம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைப்பேசிகளில் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) குறுஞ்செய்திகளால் கணக்கில் இடம்பெறாத 250 கோடி ரூபாய் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல கணக்கிடப்படாத மின்னிலக்க நாணயங்களையும் வாட்ஸ்அப் தொடர்புகள் கண்டுபிடிக்க உதவின,” என்றார் நிதியமைச்சர் நிர்மலா.

மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தொடர்புத் தளங்களுக்குள் நுழைய புதிய மசோதா, அதிகாரிகளுக்கு அனுமதி தரும் என்றார் அவர்.

தேவை ஏற்பட்டால், நிதிப் பரிவர்த்தனைகளை மறைப்பதற்குப் பயன்படுத்தும் மென்பொருள்களுக்குள் செல்லும் அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்கும்.

பிப்ரவரி 13ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வருமான வரி மசோதா, 1961 வருவாய் வரிச் சட்டத்திற்குத் திருத்தமாக உறுதிசெய்யப்படவுள்ளது.

பழைய சட்டத்திலுள்ள தேவையற்ற பகுதிகளை அகற்றி அதன் வார்த்தைகளை எளிமைப்படுத்துவது புதிய மசோதாவின் நோக்கமாகும்.

வெளிப்படுத்தப்படாத வருவாய்க்குள் மெய்நிகர் மின்னிலக்கச் சொத்துகளைச் சேர்ப்பது புதுப்பிக்கப்பட்ட மசோதாவின் முக்கியப் புதுப்பிப்பாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.