அமைச்சர் பிமல் விமானப்படையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை.

முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வாரியபொல மினும்கடே பகுதியில் விழுந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் தொடர்பாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறிய கருத்து சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விமானத்தின் எஞ்சின் அல்லது கட்டமைப்பில் எந்த தவறும் இல்லை என்றும், பயிற்சி பெறும் விமானிகளின் தவறு விபத்துக்கு காரணம் என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சரின் அந்த கருத்து சரியானது அல்ல, அதில் எந்த உண்மையும் இல்லை.

விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானால் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை உள்ளது. விபத்து நடந்தவுடன், அது குறித்து விசாரிப்பதற்காக விசாரணை நீதிமன்றம் (Court of inquiry) அமைக்கப்படுகிறது. பின்னர், விமானிகளிடம் இருந்து வாக்குமூலம் பெற முடிந்தால், அந்த தகவல்கள் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேற்கண்ட அடிப்படை நடவடிக்கைகளை எடுத்த பின்னரே விபத்து தொடர்பான விசாரணை தொடங்குகிறது.

விமானம் விபத்துக்குள்ளானால், அது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கு சிறிது காலம் ஆகும் என்பது இதுவரை பின்பற்றப்பட்ட நடைமுறைகளை பார்க்கும்போது தெளிவாகிறது.

விசாரணை நீதிமன்ற அறிக்கை முதலில் விமானப்படை தளபதிக்கு அனுப்பப்படும், பின்னர் அது பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும் என்பது வழக்கமான நடைமுறை. இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றிய பின்னரே அது குறித்து ஏதேனும் கருத்து கூறப்படும்.
இத்தகைய பின்னணியில், வாரியபொல மினும்கடே விமான விபத்து தொடர்பாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் இறுதி முடிவுகளை வெளியிட்டது பொறுப்பற்ற செயல்.

விமானப்படை தொடர்பாக கருத்துக்கள் பாதுகாப்பு அமைச்சகம் மூலம் வெளியிடப்பட வேண்டும். அது தொடர்பாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் கூறும் கருத்துக்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

அது குறித்து பொறுப்பான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட வேண்டும். மேலும், தனக்கு தொடர்பில்லாத ஒரு விஷயம் குறித்து கருத்து தெரிவித்த சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உடனடியாக இலங்கை விமானப்படையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.