அலகாபாத் நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

பெண்களின் அந்தரங்கத்தை தொடுவதும் அவர்களின் ஆடைகளை களைவதும் பாலியல் குற்றமல்ல என தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு காரில் அழைத்துச் சென்ற இளைஞர்கள், அவரைத் தொடக்கூடாத இடங்களில் தொட்டதுடன் அவரின் உடையை நீக்கினர். பின் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றபோது சிறுமி கூச்சலிடவே அங்கு மக்கள் திரண்டனர். இதையடுத்து இளைஞர்கள், தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர்கள் மீது ஐ.பி.சி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), போக்சோ சட்டப்பிரிவு 18ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புதான் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் அளித்த தீர்ப்பில், “பெண்ணைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டதாகவும் ஆடையை களைந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதெல்லாம் பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யத் திட்டமிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது வெறும் பாலியல் சீண்டல்தான்,” என தெரிவித்திருந்தார் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா.
இந்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததோடு, உணர்வுபூர்வமற்ற வகையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு எழுதி இருப்பதாகவும் சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனித தன்மையற்ற வகையில் அணுகப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.