துருக்கியின் 55 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஒரு வாரமாகத் தொடர்கின்றன.
இஸ்தான்புல் மேயர் இக்ரம் இமாமோலு (Ekrem Imamoglu) கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
போராட்டம் செய்வோர் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று கூறுகின்றனர்.
துருக்கியில் 81 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 55 மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
நூற்றுக்கணக்கானோர் கலகத் தடுப்புக் காவல்துறையினருடன் மோதினர்.
நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், பொறுமையாக இருக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார். அடுத்துவரும் நாள்கள் முக்கியமானவை என்றார் அவர்.
எர்துவானின் முக்கிய அரசியல் எதிரியாகப் பார்க்கப்படும் இமாமோலுவைத் துருக்கியே அதிகாரிகள் சென்ற வாரம் கைதுசெய்தனர்.
அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுடன் பயங்கரவாதக் குழுவுக்குத் துணைபோனதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சி அதனை அரசியல் சூழ்ச்சி என்று கூறியுள்ளது.