நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. 129 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் எட்டி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

ஏற்கனவே இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி 1 – 3 என இழந்திருந்தது. ஐந்தாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் இருந்தது பாகிஸ்தான் அணி. ஆனால், நியூசிலாந்து வீரர் டிம் சைஃபர்ட் அதிரடியில் பாகிஸ்தான் நிலை குலைந்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தபோது அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா 39 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். ஷதாப் கான் 20 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்திருந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களை எடுத்தனர்.

மேலும் பந்துகளையும் வீணடித்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் 20 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் ஜிம்மி நீஷம் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அடுத்து 129 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் டிம் சைஃபர்ட் 38 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து கடைசி வரை நின்று நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து 131 ரன்கள் எடுத்த நிலையில் அதில் 97 ரன்களை சைஃபர்ட் மட்டுமே எடுத்தார். அவர் 6 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸ் அடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது பத்தாவது ஓவரை ஷதாப் கான் வீசினார். அந்த ஓவரிலேயே வெற்றியை பெற்று விட வேண்டும் என உறுதியாக இருந்த சைஃபர்ட் அந்த ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸ் அடித்தார்.

அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளிலும் வரிசையாக சிக்ஸ் அடித்து நியூசிலாந்து அணியை 10 ஓவர்களில் வெற்றி பெற வைத்தார். இதை எடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1 – 4 என படுதோல்வி அடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.