இலங்கைக் கடற்படையினரால் கைதான மீனவர் குடும்பங்களுக்கு தினமும் ரூ.500: புதுச்சேரி அரசாங்கம் உதவி!

இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்களின் குடும்பங்களுக்கு ஒவ்வொரு நாளும் 500 ரூபாய் ரொக்க உதவி வழங்கும் திட்டத்தை புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் கே. லெட்சுமிநாராயணன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 26) அந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் வரை அந்த ரொக்கப் பணம் தினந்தோறும் வழங்கப்படும் என்றார்.
மீனவர்கள் இல்லாததால் அவர்களின் குடும்பம் தத்தளிப்பதைத் தடுத்து அத்தியாவசியத் தேவைகளைக் குடும்பத்தினர் பூர்த்தி செய்ய இந்த உதவி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் காரைக்கால் வட்டாரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரைக் கைது செய்த இலங்கைப் படையினர் அவரது இயந்திரப் படகைக் கைப்பற்றி உள்ளது.
அதற்கு இழப்பீடு வழங்க புதுச்சேரி அரசாங்கம் முன்வந்து உள்ளது. படகு இழப்பிற்காக அந்த மீனவரின் குடும்பத்துக்கு 8 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் லெட்சுமி நாராயணன் கூறினார்.
புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நல்வாழ்வுத் துறையில் பதிவு செய்யப்பட்ட அந்த இயந்திரப் படகு இல்லாததால் மீனவரின் குடும்பம் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதைத் தடுக்க இந்த உதவியை அரசாங்கம் செய்வதாக அவர் தெரிவித்தார்.