உத்தரப் பிரதேசத்தில் ரூ.7.79 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியில் ஜூஸ் கடைக்காரர்!

உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் கடைக்காரர் ஒருவருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் சராய் ரெஹ்மான் பகுதியில் வசிப்பவர் முகமது ரஹீஸ்(35). இவர் அலிகார் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஜூஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.500 – 600 வரை சம்பாதித்து வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கு கடந்த 18 ஆம் தேதி வருமான வரி அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோடீஸில், ரூ.7.79 கோடி வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் மார்ச் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முகமது ரஹீஸ், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரஹீஸ் கூறுகையில், “இவ்வளவு வரி எவ்வாறு வந்தது என்று எனக்கு தெரியாது. வயதான பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் என்ன செய்வதென்று தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் பான் கார்டை தவறாகப் பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது. தீபக் சர்மா என்ற மீது சந்தேக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தற்போது அதிகாரிகள் தேடி வருகின்றனர். விசாரணை இன்னும் நடந்து வருகிறது. மேலும் வரும் நாள்களில் கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் கும்பமேளா நடைபெற்ற 45 நாள்களில் ரூ.30 கோடி வருவாய் ஈட்டிய படகோட்டிக்கு ரூ.12.80 கோடி வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.