மோடியின் இலங்கை பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தி என்ன?

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 4 முதல் 6 வரை அரசு முறை பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று (28) அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், இந்த பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதியின் இந்திய அரசு முறை பயணத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட “பகிர்ந்த எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்ப்பது” என்ற கூட்டு தொலைநோக்கு உடன்பாட்டில் எட்டப்பட்ட ஒத்துழைப்பு துறைகளின் முன்னேற்றம் குறித்து இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மூத்த பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனும் சந்திப்புகளை நடத்துவார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் அனுராதபுரத்திற்கும் செல்லவுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் கடைசியாக 2019 இல் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
“இந்தியாவும் இலங்கையும் வலுவான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளை கொண்ட நாகரீக பிணைப்புகளை பகிர்ந்து கொள்கின்றன. இந்த பயணம் இரு நாடுகளுக்கிடையிலான அந்த பிணைப்பின் உயர் மட்ட வெளிப்பாடாக உள்ளது, மேலும் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பன்முக கூட்டாண்மையை ஆழப்படுத்த மேலும் உத்வேகம் அளிக்கும்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.