மியன்மார் நிலநடுக்கத்தால் தாய்லாந்து, வியட்னாமிலும் பாதிப்பு; குறைந்தது 28 பேர் பலி

மியன்மார் மற்றும் அண்டை நாடுகளான தாய்லாந்து, வியட்னாம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர்.
கட்டடங்கள், பாலங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்ததுடன் சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டன.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சாகைங் நகரின் வடமேற்கில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது.
பேங்காக்கில், கட்டப்பட்டு வந்த 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 43 தொழிலாளர்கள் சிக்கியதாக காவல்துறை மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றும் வானளாவிய கட்டடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து தொழிலாளர்கள் பலர் மீட்கப்பட்டனர் என்றும் தாய்லாந்து துணைப் பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் தெரிவித்தார்.
அரசாங்க அலுவலகங்களை அமைப்பதற்காகக் கட்டப்பட்டு வந்த அக்கட்டடம் தரைமட்டமானதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் காயமுற்றிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக பாங் சியூ மாவட்டத்தின் இணை காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.
மியன்மாரின் பல்வேறு பகுதிகளிலும் பேங்காக்கிலும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் ராணுவ அரசாங்கம், மனிதாபிமான உதவிக்குப் பிற நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அடிக்கடி காணப்படாத நிகழ்வு என நம்பப்படுகிறது.
தாய்லாந்து எல்லைக்கு அப்பால் மியன்மாரில், நாட்டின் பண்டைய அரச தலைநகரான மண்டலேயில் உள்ள பௌத்த குடியிருப்பின் மையத்தில் உள்ள ஒரு பள்ளிவாசல் பகுதியளவு இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்தின் சியாங்மாய், வியட்னாமின் ஹோ சி மின் சிட்டி, ஹனோய் ஆகிய நகரங்களிலும் மோசமான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகப் பலர் தெரிவித்தனர். மியன்மார் தலைநகர் நேப்பிடோவின் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன; கட்டடங்கள் சேதமடைந்தன.
நேப்பிடோ விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்த அனைவரும் கொல்லப்பட்டதாக யாங்கோன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நேப்பிடோ மற்றும் மண்டலே விமான நிலையங்களின் செயல்பாடுகள் மூடப்பட்டுள்ளதாக ஆளும் ராணுவ ஆட்சிக்குழுவின் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தென்மேற்குச் சீனாவில் உள்ள யூனான் மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக பெய்ஜிங் நிலநடுக்க அமைப்பு தெரிவித்தது. 7.9 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் அந்த அமைப்பு சொன்னது.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
வடதாய்லாந்திலிருந்து அந்நாட்டின் தலைநகர் பேங்காக் வரை மோசமான நில அதிர்வுகள் உணரப்பட்டன. தாய்லாந்தில் பலர், கட்டடங்களிலிருந்து உடனடியாக வெளியேறினர்.
பேங்காக்கில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. நகரின் சில ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள புக்கெட் தீவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அந்நாட்டுப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத், நிலநடுக்கத்துக்குப் பிறகு தமது பணிகளை நிறுத்திவிட்டு உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டதாக எக்ஸ் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
மியன்மாரில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 1930லிருந்து 1956ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்நாட்டை ரிக்டரில் ஏழுக்கும் அதிகமாகப் பதிவான நிலநடுக்கங்கள் ஆறு முறை உலுக்கின. அதோடு, 2016ல் மியன்மாரை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது