11 பில்லியன் மணி நேரம் கைப்பேசியில் மூழ்கிய இந்தியர்கள்

கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக 11 பில்லியன் மணி நேரத்தைக் கைப்பேசியில் செலவிட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அவர்கள் நாளொன்றுக்குச் சராசரியாக ஐந்து மணி நேரம் கைப்பேசியில் மூழ்கியதாக ‘இஒய்’ மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தின் வருடாந்தர பொழுதுபோக்கு அறிக்கை கூறியுள்ளது.
அதிலும் 70 விழுக்காட்டு நேரத்தைச் சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டு, காணொளி ஆகியவற்றுக்காக அவர்கள் செலவிட்டதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
மொத்தம் 2.5 டிரில்லியன் ரூபாய் (S$39.2 பில்லியன்) மதிப்புகொண்ட இந்திய ஊடக, பொழுதுபோக்குத் துறையின் ஆகப் பெரும்பிரிவாக மின்னிலக்க ஒளிவழிகள் உருவெடுத்துள்ளது. முதன்முறையாக, அது தொலைக்காட்சியை விஞ்சியுள்ளது.
ஆயினும், கைப்பேசியில் நேரம் செலவிடுவதில் இந்தியர்கள் முதலிடத்தில் இல்லை என்பது ஆறுதல்தரும் தகவல். அப்பட்டியலில் முதலிரு இடங்களில் முறையே இந்தோனீசியர்களும் பிரேசிலியர்களும் உள்ளனர்.
உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் தற்போது 562 மில்லியன் பேர் கைப்பேசியைப் பயன்படுத்துகின்றனர். இது, அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைக் காட்டிலும் அதிகம்.
இதனிடையே, 2024ஆம் ஆண்டில் 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை இணையச் சேவைக்கு 270க்கும் மேற்பட்டோர் மாறியுள்ளனர். இணையச் சேவை பெறுவோரில் 40 விழுக்காட்டினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தியா ‘மின்னிலக்க மாற்றுப் புள்ளி’யை எட்டிவிட்டதாகக் கூறுகிறார் இஒய் நிறுவனத்தின் ஊடக, பொழுதுபோக்குப் பிரிவுத் தலைவர் ஆஷிஷ் பெர்வானி.
இதன் காரணமாக, தொலைக்காட்சி, வானொலி, அச்சிதழ் போன்ற மரபார்ந்த முதன்மை ஊடகங்களின் வருவாய் சென்ற ஆண்டில் சரிவைச் சந்தித்தது என்றும் இஒய் நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இசை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் தொடர்கள் போன்ற நிகழ்வுகளும் ஊடக, பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க அளவு பங்காற்றியுள்ளன.
வரும் 2027ஆம் ஆண்டில் அத்துறையின் மதிப்பு 3.1 டிரில்லியன் ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.