`எல்2; எம்புரான்’ குறைவான நாட்களில் ரூ.100 கோடி சாதனை!

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் `எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார்.

இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பிரபல டிக்கெட் ஆன்லைன் புக்கிங் செயலியில் ஒரு மணி நேரத்தில் 96.14k டிக்கெட்டுகள் விற்று இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் அதிக டிக்கெட் விற்ற படம் என்ற சாதனையை இப்படம் செய்தது. ப்ரீ புக்கிங்கிலே இப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐமேக்ஸ் ஃபார்மெட்டிலும் இப்படம் வெளியாவதால் முதல் முறையாக ஒரு மலையாள படம் ஐமேக்ஸ் ஃபார்மெட்டில் வெளியாகும் படம் என்ற பெயரை இப்படம் பெற்றது.

இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 27ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இரண்டு நாளில் உலகளவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மலையாளத் திரையுலகில் குறைவான நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை இப்படம் பெற்றுள்ளது. முன்னதாக மோகன்லால் நடித்த புலிமுருகன் படம் மலையாளத் திரையுலகில் முதல் ரூ.100 கோடி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.