கனேடிய பிரதமர் புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்காவை மிரட்டும்போது, ஒப்பந்தங்களுக்கு தான் தயார் என டிரம்ப் தெரிவிப்பு!

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் கனேடிய பொருட்களுக்கு விதிக்கப்படவுள்ள 25% அமெரிக்க வரி நடைமுறைக்கு வந்தால், அதற்கு ஈடாக அமெரிக்க பொருட்களுக்கும் வரி விதிக்க தயாராக இருப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனேடிய பிரதமர் நேற்று ஜனாதிபதி டிரம்ப் உடனான முதல் தொலைபேசி உரையாடலின்போது இதைத் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி டிரம்ப், தான் ஒப்பந்தங்களுக்கு திறந்திருப்பதாகக் கூறினார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை (26) அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு 25% வரி விதித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அழைப்பு வந்தது. இது பல தசாப்தங்களாக நாடுகளுக்கு இடையே இருந்த சுதந்திர வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட கார்னியின் அலுவலகம், டிரம்ப் வாக்குறுதியளித்த இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக கனடா அடுத்த வாரம் அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.
இருப்பினும், ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கனடாவின் பெடரல் தேர்தலுக்குப் பிறகு, புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். டொனால்ட் டிரம்ப்பின் வரிப் போர் காரணமாக அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன.