கண்மணியே பேசு…
கண்மணியே பேசு…
பசுத்தோல் போர்த்திய புலியினால் மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருத்தியின் வாழ்வியல் சம்பவங்களின் கோர்வையாய் ‘கண்மணியே பேசு’ வெளிவருகிறது. இதில் வருகின்ற அனைத்து சம்பவங்களும் அவளின் முழு சம்மதத்துடனும் தொடர் கதையாய் எழுதவிருப்பதால் இன்று இதன் ஆரம்பத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். இது பாதிக்கப்பட்ட அல்லது இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஏனைய பெண்களுக்கு ஒரு வடிகோலாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வழி சமைக்கட்டும்.
-கோதை
======================================================================
கண்மணியே பேசு…
அதிகாலை சூரியனின் பளீரெண்ட கதிர்களும் இளவேனிற் காற்றின் மென்மையும் சேர்ந்தே முகத்தையும் இதயத்தையும் தடவிச் செல்ல, தேம்ஸ் நதி ஓரமாய் நடந்தவளின் நிழலில் கதிரவன் ஒரு ஓவியத்தை வரைந்திருந்தான். யாரையும் இலகுவாகக் கவரக் கூடிய அந்த அழகான முகத்தை அப்படியே நிழலில் கொண்டு வர முடியாத கவலையில் தன் கதிர் வீச்சை அவன் சற்றே குறைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அவளது சுருள் சுருளான முடிகள் தென்றலுடன் சேர்த்து இசை பாட, மான் குட்டியாய் துள்ளி நடந்த அவளிடமிருந்து வெளிப்பட்ட பெரு மூச்சு மட்டும் அனல்க் காற்றாய் அத்தென்றலையும் நெருப்பாக்கியது. தன் பெருமூச்சுக் காற்றில் கலந்திருந்தது கோபமா, துயரமா, ஆதங்கமா, தன்னிரக்கமா என்று வகைப்படுத்த முடியாத எண்ணக்கலவைகளில் அவள் துவண்ட போது அவள் துள்ளலில் இருந்த இதமான மென்மை தன் தன்மையை இழந்தது.
‘மன்னித்துக் கொள்ளுங்கள் தேவதையே, நேரம் என்னவென்று சொல்ல முடியுமா ?’ மிக லாகவமான நுனி நாக்கு ஆங்கிலம்.
‘ எட்டு மணிக்கு ஐந்து நிமிடங்கள்’ சொல்லியவாறே முன்னுக்கு நின்ற ஆறு அடி ஐந்து அங்குலம் இருக்குமா என யோசிக்க வைக்கும் தோற்றத்தை அவசரமாக நிமிர்ந்து பார்த்தாள்.
‘ அவ்வளவு தானா, உங்கள் காலை ஓட்டத்தை தாமதமாக்கியத்துக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.’
தனது மிக ஆறுதலான நடையை நையாண்டி பண்ணிய அவனது கதையை கேட்கும் மன நிலையில் அவள் இல்லை.
‘கொழுப்புத்தான்…’ மனதில் கருவிக்கொண்டாள்.
அவனை விலத்தி நடக்க முடியாமல் அவனே கோபுரமாய் நின்றதில் சிறிது கோபமும் வர, அதைக் காட்டிக்கொள்ளாமல் மிக மென்மையான புன்னகை ஒன்றைத் தானமாக்கி விட்டு விலத்தி நடந்தாள்.
தன் முன்னே கோபுரமாய் நின்றவனை விலத்தி நடக்க முற்பட்டாள், இவனைத் தன் வாழ்க்கையில் விலத்தவே முடியாமல் வரப்போகிறது என்னும் நிஜத்தை புரிந்து கொள்ளாமல்…
கண்மணி இன்னும் பேசுவாள் …