நுவரெலியாவை நாம் வெல்வோம் – ஜீவன் தொண்டமான் உறுதி

உள்ளூராட்சித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் ஹற்றன் கொட்டகலை , கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் கோவிலில் நடைபெற்ற ஆசீர்வாத பூஜைக்குப் பிறகு கொட்டகலை கட்சி அலுவலக தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் தங்கள் கட்சியின் சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவதாகவும், கொத்மலை மற்றும் மஸ்கெலிய பிரதேச சபைகளுக்கு போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
உள்ளூராட்சித் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றாவது போட்டியிடும் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜீவன் தொண்டமான் ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், கட்சியின் பொருளாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.