குடும்பத்துடன் சாகடிப்போம்’ – பொலிஸ் அதிகாரிக்கு பாதாள உலகத்திலிருந்து மிரட்டல்.

பிரான்சில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் கணேமுல்லே சஞ்சீவவின் முக்கிய கூட்டாளியான ‘நேவி தினேஷ்’ என்பவர் கம்பஹா தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர், அதன் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு , தொலைபேசியில் அழைத்து குடும்பத்துடன் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நேவி தினேஷ் என்பவரின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர் இந்த மிரட்டல்களை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 15 ஆம் திகதி முதல் இந்த மிரட்டல்கள் தொடர்ச்சியாக பொலிஸ் அதிகாரிகளுக்கு வந்து கொண்டிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொலைபேசி அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்ததில் இந்த அழைப்புகள் துபாய் மற்றும் பிரான்சில் இருந்து வந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
கணேமுல்லே சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பிறகு, அவர் வழிநடத்திய பாதாள உலக குழுவுக்கு தலைமை தாங்க நேவி தினேஷ் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் திரைமறைவில் இருந்து இந்த பாதாள உலக குழுவை வழிநடத்தி வருவதாகவும், தனது கூட்டாளிகளைப் பயன்படுத்தி கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேவி தினேஷ் என்பவரின் தந்தை மற்றும் சகோதரர் போதைப்பொருளுடன் கம்பஹா பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த கைதுக்குப் பிறகு கம்பஹா தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர், அதன் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் விசாரணை பொறுப்பதிகாரி பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோருக்கு தொலைபேசியில் அழைத்த நேவி தினேஷ், குடும்பத்துடன் கொலை செய்து அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிறப்பு பொலிஸ் குழு விசாரணை ஆரம்பித்துள்ளதுடன், நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது.