வட மாகாண காணிகளை மீள மக்களுக்கு வழங்க அரசு எடுத்துள்ள முடிவு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்.

வடமாகாணத்திலே படையினர்,மற்றும் தனியார் வசமுள்ள மக்களின் காணிகளை மீட்டு மக்களிடமே கையளிக்கப் போகின்றோமென போக்குவரத்து பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த (29.03) சனிக்கிழமை மன்னாரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்கள் சந்திப்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கிலே தேசிய பிரச்சினை ஒன்று இருக்கிறது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை, தமிழ், சிங்கள முஸ்லிம் இனங்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூகம்.
அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பது ஒரு முக்கியமான விடயமாக அரசுக்கு இருக்கிறது.
நிறுவனங்கள், படையினர் மற்றும் சில தனியார்கள், மக்களது காணிகளை தனதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான தீர்வு ஒன்றை செய்ய வேண்டிய ஒரு சூழல் இப்போது இருக்கிறது.
மக்களுக்குச் சொந்தமான காணிகள் மன்னார் மறிச்சுகட்டி முதல் காங்கேசன் துறை வரை உள்ளன.அந்த காணிகள் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரம் வந்திருக்கிறது. அவற்றை அந்த காணிகளுக்கு சொந்தமானவர்களுக்கு மீண்டும் ஒப்படைப்பதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
படையினர் பிடித்து வைத்திருக்கும் காணிகளை, மீண்டும் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கவுள்ளோம். இப்போதே ஏகப்பட்ட காணிகளை மக்களிடம் மீளவும் ஒப்படைக்க ஆரம்பித்துள்ளோம். அது தொடர்ந்தும் நடைபெறும். அரசியலுக்காக அல்ல, படையினரது கருத்துகளையும் கேட்டறிந்து, அந்த காணிகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க எம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளோம்.
போர்க்காலத்தில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு, இன்றுவரை தொடர்ந்து சிறையில் இருக்கும் நபர்கள் குறித்தும் சில முடிவுகளை எடுக்க எமது அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மன்னார் மாவட்டமானது யுத்தத்தாலும், பொருளாதாரத்திலும் மிகவும் அடிபட்ட ஒரு பகுதியாக இருக்கிறது. எனவே இப்பகுதியை முன்னேற்றுவது எமது கட்சியின் ஒரு கொள்கையாக மட்டுமல்ல, ஜனாதிபதியின் ஆதங்கமாகவும் இருக்கிறது.
அதற்காகவே இப்பகுதிக்கு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தொகை பணத்தை ஜனாதிபதி ஒதுக்கி உள்ளார்.
அத்தோடு வடக்கில் மூன்று பெரிய தொழிற்பேட்டைகளை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அதேபோல வடக்கில் இதுவரை காலமும் செயற்படாமல் மூடப்பட்டிருந்த தொழில் மையங்களை மீண்டும் நாங்கள் திறந்திருக்கிறோம். அது மாத்திரமன்றி வடக்கு மாகாண வீதிகளைப் புணரமைப்பதற்காக 550 மில்லியன் பணத்தை ஒதுக்கியுள்ளோம்.
மன்னாரின் சிறிய வீதிகளைப் புணரமைப்பதற்காக 60 கோடி ரூபா பணத்தை ஒதுக்கியுள்ளோம். அதேபோல பாடசாலைகளை மேம்படுத்தவும் நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி விரைவில் மன்னாருக்கு வந்து இங்குள்ள பாடசாலைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் குறித்த பிரச்சனைகளை ஆராய்ந்து பலரை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார்.
அத்தோடு வில்பத்து ஊடாக செல்லும் பாதையை திறக்க வேண்டிய தேவை மக்களுக்கு இருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் அந்தப் பாதையில் உள்ள பிரச்சனைகளை குறித்து தேடல் ஒன்றை மேற்கொண்டார் . சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அந்தப் பாதையை மீண்டும் திறப்பதற்கான பணிகளைச் செய்ய, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல தவறான விதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல தொழில் துறைகள், மக்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களாகவே நிறுத்திவிட்டு சென்றுள்ளார்கள்.
இம்முறை மன்னாரின் அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். அப்படி வெற்றி பெறுவது எமது வேட்பாளர்களின் ஆதங்கமாகவும் இருக்கிறது. அதற்காக அவர்கள் செயற்படுவார்கள்.
அதற்காகவே இன்றைய தினம் மன்னார், நானாட்டான், முசலி மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றின் வேட்பாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு எமது கொள்கைகள், தேசிய மக்கள் சக்தி கட்சியின் செற்பாடுகள் என்பவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார்.”
குறித்த வேட்பாளர்கள் சந்திப்பு நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்கள்,பொதுமக்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.