அரசு ஊழியர்களுக்கு ஜனாதிபதி அனுரவின் எச்சரிக்கை!

உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று (31) புத்தளை நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.
சம்பளம் உயர்த்தப்பட்டிருந்தாலும் சில இடங்களில் அரசு அதிகாரிகள் சிறு தவறுகளை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், உடனடியாக அவற்றை விட்டுவிட்டு கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மிகவும் சிரமப்பட்டு பெற்ற வேலை சில நாட்களில் பறிபோகும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.
“76 வருடங்களுக்குப் பிறகு ஒரு அரசாங்கம் அமைத்துள்ளோம். அது எப்படிப்பட்ட அரசாங்கம்? மக்களின் பணத்தை ஒரு ரூபாய் கூட திருடாத, வீணாக்காத அரசாங்கம். இது நம்முடைய அரசாங்கம். எங்கள் அமைச்சர்கள், நான், எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் ஒரு ரூபாய் கூட திருட மாட்டார்கள், வீணாக்க மாட்டார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்.
முதல் முறையாக இப்படி ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. முன்பு வேலை ஒன்றை பெறக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. வீதி போடும்போது அமைச்சரின் வீட்டுக்கு பணம் சென்றது. அதெல்லாம் முடிந்துவிட்டது. இன்னும் சில இடங்களில் சில அரசு அதிகாரிகள் சிறு சிறு தவறுகளை செய்வதாக தகவல் வருகிறது. நாங்கள் சம்பளம் உயர்த்தியுள்ளோம். சிறிய தவறுகளை செய்ய தயாராக வேண்டாம். செய்தால் மிகவும் சிரமப்பட்டு பெற்ற வேலை மிக குறுகிய காலத்தில் பறிபோகும். இப்படித்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
இப்போது எனக்குத் தெரியும் சுங்கத் துறையில் நான்கு பேர் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இன்னும் இரண்டு மூன்று பேர் வெளியேறுவார்கள். பொலிஸ் துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியேறியுள்ளனர். நல்லதா கெட்டதா? நல்லதுதானே?” என்று ஜனாதிபதி மக்களிடம் கேள்வி எழுப்பினார்.