மலேசியாவின் சுபாங் ஜெயா அருகில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில் மோசமான தீச்சம்பவம்!

மலேசியாவின் சுபாங் ஜெயா அருகில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்1) மிக மோசமான தீச்சம்பம் ஏற்பட்டுள்ளது.

தீ கொழுந்துவிட்டு எரிவதை சுபாங் ஜெயாவிலிருந்தும் சம்பவ இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்திலிருந்தும் காண முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காலை 8.10 மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு கிடைத்ததாக சுபாங் ஜெயா தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

“ஜாலான் புத்ரா ஹார்மோனியில் தீ மூண்டது. தீயணைப்புப் பணியில் சுபாங் ஜெயா, ஷா அலாம், பூச்சோங் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்,” என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

எரிவாயுக் குழாய் வெடித்ததில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவத்தைக் காட்டும் படங்களும் காணொளிகளும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தீ மூண்டதை சுபாங் ஜெயா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் உறுதிப்படுத்தினார்.

“அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தீயணைப்புப் படையினரிடமிருந்து கிடைக்கும் கூடுதல் தகவல்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படும். தீயணைப்புப் பணியில் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்படும்,” என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.