அணுவாயுத மிரட்டல் : டிரம்புக்குச் சவால்விடும் ஈரான்

ஈரான் அமெரிக்காவுடனான புதிய அணுவாயுத ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் அதன் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) எச்சரித்தார்.

அதற்குப் பதிலடி தரும்விதமாக ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி ஹமேனி, “ அதிபர் டிரம்ப் சொல்வதை அமெரிக்கா பின்பற்றினால் ஈரான் கடுமையான நடவடிக்கை எடுக்கும்,” என்று சூளுரைத்துள்ளார்.

மார்ச் மாதத் தொடக்கத்தில் திரு டிரம்ப் ஈரான் தலைவர்களுக்குப் புதிய அணுவாயுத ஒப்பந்தம் குறித்து கடிதம் அனுப்பினார். ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டு இரண்டு மாதங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லை என்றால் ஈரானில் குண்டுகள் வீசப்படும் என்று டிரம்ப் மிரட்டினார்.

கடிதம் அனுப்பிக் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போது திரு டிரம்ப் ஈரானை மீண்டும் எச்சரித்துள்ளார்.

“ஈரானுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போதும் பகையாளியாக இருப்பார்கள். அதனால் நம்மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிடுவார்கள். தாக்குதல் நடத்தினால் அதற்குக் கடுமையான பதிலடி தரப்படும்,” என்று காமேனி தெரிவித்தார்.

ஈரானில் தேசத்துரோகம் போன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள முயற்சி செய்தால், ஈரானிய மக்களே அதை அழித்துவிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக ஈரானில் உள்நாட்டுப் பிரச்சினைகளை அமெரிக்கா தூண்டிவிடுவதாக டெஹ்ரான் குற்றஞ்சாட்டி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.