நீக்கும்படி அறிவுறுத்தப்பட்ட பதிவுகளில் 30% இந்திய அரசுக்கு எதிரானவை: ‘எக்ஸ்’ தளம் தெரிவிப்பு

சமூக ஊடகங்களில் இருந்து நீக்கும்படி இந்திய அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட பதிவுகளில் 30 விழுக்காடு, மத்திய அமைச்சர்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்கு எதிரானவை என எக்ஸ் தளம் கூறியுள்ளது.
‘எக்ஸ்’ தளம், ‘ஃபேஸ்புக்’, ‘இன்ஸ்டகிராம்’, ‘வாட்ஸ் அப்’ ஆகிய சமூக ஊடகங்களிலிருந்து குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது போன்ற படங்கள், காணொளிகள், மக்களை தவறாக வழிநடத்தும் பதிவுகள் உள்ளிட்ட சட்டவிரோத பதிவுகளை நீக்கும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பதிவுகளை நீக்கும்படி சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.
இதனை எதிர்த்து எக்ஸ் தளம் தரப்பில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி, கர்நாடக உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவதூறு கருத்துகள் தொடர்பான பதிவுகள், காணொளிகள் ஆகியவற்றை நீக்கும்படி சமூக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் இருக்கும் பதிவுகளில் 30 விழுக்காடு மத்திய அரசுத் துறைகளையும் அத்துறைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் சார்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் வரவு வைக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.
அதுதொடர்பான காணொளியை ‘எக்ஸ்’ தளத்திலிருந்து நீக்கும்படி மத்திய உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசியது போன்று திரித்துப் பரப்பப்பட்ட காணொளியை நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இருந்து நீக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்திய பதிவுகள் குறித்த தகவல்களைக் கடந்த இரு ஆண்டுகளாக ‘எக்ஸ்’ தளம் வெளியிடாமல் தவிர்த்த நிலையில், தற்போது மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் எக்ஸ் தளம் இத்தகவல்களைப் பகிர்ந்துள்ளது.