மனித உரிமை ஆணைக்குழு தலையீடு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது::-
“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்தப் பிரேரணையில் அடிப்படையில் கவனம் செலுத்தியுள்ளது.
1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடை செய்தல் சட்டம், பகிடிவதை செய்வதானது இலங்கையின் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகவும், பிணை வழங்கப்படாத குற்றமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் பகிடிவதை செய்யும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும் கைது பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் எனவும் ஏற்பாடுகளை கொண்டுள்ளது
எனவே, யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மேற்குறித்த பகிடிவதை சம்பவம் தொடர்பில் உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து அது தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் 04.04.2025 இற்கு முன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய காரியாலயத்துக்கு அனுப்பிவைக்குமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர், கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண ம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.